3வது பெரிய கட்சிக்காக கேஎஸ் அழகிரி சண்டை போட்டது இதுக்குதானா…? அதிமுக, பாஜகவை வைத்து காய் நகர்த்த முயற்சி… வெளியானது இரகசியம்!!

Author: Babu Lakshmanan
25 February 2022, 6:50 pm
Quick Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது “தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 308 வார்டுகளில் வென்று 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டிருந்தார்.

3வது பெரிய கட்சி எது..?

இது தமிழகத்தில் தாங்கள்தான் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறோம் என்று கருதி வரும் காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அண்ணாமலையின் கருத்தை உடனடியாக மறுத்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில் “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசை விட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்க முடியாத வாதமாகும்.

2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்றுள்ள பாஜக 3-வது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலமே படுதோல்வியைக் கண்டிருக்கிறது. இது ஒரு மாயை என்பதை தேர்தல் நிரூபித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது” என்று காட்டமாக கூறியிருந்தார்.

இத்தனைக்கும், அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டு 3-வது இடத்தை பிடித்து இருக்கிறோம் என்றுதான் குறிப்பிட்டிருந்தார். என்றபோதிலும் நாகரிகம் கருதி அழகிரியின் பாட்டுக்கு அவர் எதிர் பாட்டு பாடவில்லை.

ஓபிஎஸ் நெற்றியடி

அதேநேரம் அதிமுக பற்றி கேலியாக குறிப்பிட்டதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நெற்றியடி கொடுத்தார்.

“ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் 400க்கும் அதிகமான நாடாளுமன்ற இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இன்று 40 இடங்களுக்கு அல்லல்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி சிந்திக்காமல், அதிமுகவை விமர்சனம் செய்துள்ளார்கள். 1967-ம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி.

55 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதிமுக, திமுக என மாறி, மாறி அடுத்தவர் முதுகில் சவாரி செய்து ஒரு சில இடங்களைப் பெற்றுவரும் நிலையில் தமிழக காங்கிரஸ் இருந்து வருகிறது. அதைப்பற்றி சிந்திக்காமல், அதிமுகவுக்கு எதிர்காலமில்லை என அழகிரி கூறியிருப்பது நகைப்புக்குரியது. அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். தோல்வியைக் கண்டு அதிமுக துவண்டதில்லை, மாறாக மீண்டெழுந்தே வந்திருக்கிறது.

திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடைபெறும்? அதன் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை. எனவே இதைவைத்து அதிமுகவுக்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது பகல் கனவு. இது நிச்சயம் பலிக்காது. ‘இலவு காத்த கிளி போல’ ஏதாவது ஒன்றிரண்டு மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்குமா என்ற ஆசையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இதுபோல் பேசியிருப்பார் என்றே கருதுகிறேன். சொந்தக் காலில் நிற்காமல் அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் காங்கிரசுக்கு அதிமுகவைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை கிடையாது” என்று சுடச்சுட பதில் அளித்துள்ளார்.

கேலிக்கூத்து

இந்த நிலையில்தான் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பதுபோல, மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அளித்த பதில் முற்றிலும் தவறானது என்பது மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் வாங்கிய ஓட்டுகள் குறித்த புள்ளி விவரத்தில் தெரியவந்து இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகள் வெளியான நான்கே நாட்களில் கே எஸ் அழகிரியின் கேலிக் கூத்து இதில் வெளிப்பட்டுள்ளது.

Palani annamalai - Updatenews360

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதும் நிரூபணமாகி இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், திமுக 43 சதவீதமும், அதிமுக 25.47 சதவீதமும், பாஜக 4.92 சதவீதமும் காங்கிரஸ் 3.35 சதவீதமும் பெற்றுள்ளன. அதாவது பாஜகவை விட காங்கிரஸ் 1.6 சதவீத ஓட்டுகளை குறைவாக பெற்று நான்காவது இடத்தில்தான் உள்ளது.

குறிப்பாக மாநகராட்சி தேர்தலில் 7.17 சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் பெற்ற ஓட்டுகள் 3.16 சதவீதம்தான். இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் இந்தத் தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அப்படி இருக்கும்போது கே எஸ் அழகிரி, எதற்காக அள்ளி விட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

கடும் போட்டி

ஒருவேளை, அவசரகதியில் கூறி இருப்பாரோ என்று நினைத்தால் அது தவறு.
அவர் தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படி சொல்லியிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

“கே எஸ் அழகிரியின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. 2019 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட அவர் காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி 3 ஆண்டுகள் மட்டுமே தலைவர் பதவியில் இருக்க முடியும்.

ஆனால் கடந்த 6 மாதங்களாகவே, தனது பதவியை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி மேலிடத்திடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அவருடைய விடா முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

தற்போதைய நிலவரப்படி கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜயதரணி, செல்வப் பெருந்தகை, மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மூத்த தலைவர்களான நாசே ராமச்சந்திரன், ரூபி மனோகரன் எம்எல்ஏ, திருநாவுக்கரசர் எம்பி, கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோரும் பந்தய களத்தில் உள்ளனர்.

கடந்த மாதம் இவர்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டு தலைவர் பதவியை பெறுவதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டும் உள்ளனர். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று சோனியாவும், ராகுலும் உறுதிபட தெரிவித்து விட்டனர்.

பதவி முக்கியம்

தனக்கு தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கே எஸ் அழகிரி சீட் கொடுத்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய கரூர் எம்பி ஜோதிமணிக்கு அப்பதவி கிடைக்கவிடாமல் அழகிரி முட்டுக்கட்டை போட்டு விட்டார்.

அதுமட்டுமின்றி கரூர் மாவட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜோதிமணி மறைமுகமாக பனிப்போரில் ஈடுபட்டு வருவதும் அவருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டது என்ற பேச்சும் உள்ளது.

இந்த நிலையில்தான் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ், மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தொடர்கிறது என்று பாஜகவுக்கு பதிலளிக்க போய் கே எஸ் அழகிரி தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளார்.

Nellai KS Alagiri Byte - updatenews360

அண்மையில் ராகுல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியை பிடிக்கமுடியாது என்று கூறியிருந்தார்.

இதை தவறு என்று சொல்வது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாஜக
தனித்துப் போட்டியிட்டு காங்கிரசை நான்காவது இடத்திற்கு தள்ளிவிட்டது. அத்துடன் மட்டுமின்றி தமிழகத்தில் எதிர்கால ஆட்சிக்கு பிள்ளையார் சுழியும் போட்டுள்ளது.

இந்த உண்மை தற்போது அம்பலமாகிவிட்டதால் கே எஸ் அழகிரி தனக்கு இன்னொரு முறை தலைவர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி அவசரக் கோலத்தில் சொன்ன தப்பு கணக்கு அவரை அனைவரும் கேலிப் பொருளாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டது.

இந்த விவகாரத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம், கே எஸ் அழகிரி வசமாக சிக்கிக்கொண்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Views: - 786

0

0