ஜி.யு. போப்பை குறை சொன்னால் அமைச்சருக்கு ஏன் கோபம்..? பெரியார் சொன்னது மட்டும் சரியா..? அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி

Author: Babu Lakshmanan
23 February 2023, 6:47 pm
Quick Share

ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாக சொன்னால் அமைச்சர் பொன்முடிக்கு ஏன் கோபம் வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழக ஆளுநர் உயர்திரு ஆர்.என்.ரவி அவர்களை விமர்சித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்தேன். வழக்கம் போல புரட்டும், போலி பெருமிதமும் நிறைந்த திமுகவுக்கே உரித்தான அறிக்கை. கார்ல் மார்க்ஸ் குறித்து மாண்புமிகு ஆளுநர், பிப்ரவரி 21 அன்று கூறிய கருத்துக்களை, பொன்முடி விமர்சித்திருக்கிறார்.

ஆனால் திமுகவினரின் கொள்கை தந்தையான பெரியார், திருச்சியில் 1943 ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 21 அன்று, “கம்யூனிசம் என்பது இனிப்பு தோய்க்கப்பட்ட விஷ மாத்திரை” என்றும், “இளைஞர்கள் கம்யூனிஸ்ட்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் விமர்சித்திருப்பதற்கு பொன்முடி ஏதேனும் கருத்து சொல்வாரா?

அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், திக தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘Collected works of Periyar EVR’ என்ற புத்தகத்தை படிக்கவும். ஆளுநர், தமிழர்களின் பாரம்பரியம் குறித்தும் திருக்குறள் குறித்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும் பெருமையாகப் பேசுவது, அமைச்சருக்கு பொறுக்கவில்லை.
ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு தவறு என்று கூறினால், அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்?

தன் ஒரு மகனை பாராளுமன்ற உறுப்பினராகவும், இன்னொரு மகனை கிரிக்கெட் சங்கத் தலைவராக்கியும் அழகு பார்க்கும் அமைச்சர் பொன்முடி, பொதுவுடைமை குறித்துப் பேசுவதெல்லாம், திமுகவுக்கே உரித்தான நகைமுரண். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று நினைத்துக் கொண்டு, தன் அறிக்கையில், ஆளுங்கட்சிக் கவுன்சிலரால் ராணுவ வீரர் கொல்லப்பட்டதை ஒரு வழியாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

ஆனால் அந்தக் கவுன்சிலர் மீது கட்சி ரீதியாக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சியின் சார்பில் மன்னிப்பு கூடக் கேட்காமல், ஒட்டு மொத்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்துவதை என்னவென்று சொல்வது?

இன்று வரை, கோவை தற்கொலைப் படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சமாளிக்கும் நீங்கள், தங்கள் சகோதரனை இழந்த நாட்டுப்பற்று மிக்க முன்னாள் ராணுவ வீரர்களின் அறச் சீற்றத்தை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்? தங்கள் ஆட்சியின் பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு தோல்வி உள்ளிட்ட இழிவு நிலை குறித்து மக்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம், ஆளுநர் மேல் ஏதேனும் குற்றம் சுமத்தி, மக்களைத் திசை திருப்பும் மலினமான முயற்சிகளில் இனியும் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 278

1

0