மகளிர் உரிமைத் தொகை கிடைக்கலையா..? 18ம் தேதி வரை பொறுத்திருங்க… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

Author: Babu Lakshmanan
15 September 2023, 1:44 pm
Quick Share

மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 கிடைக்கப் பெறாத பெண்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

புகார்கள் வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 183

0

0