முதலமைச்சரின் தங்கையை காரோடு கட்டித் தூக்கிய போலீஸ்… தீவிரமடையும் அரசியல் மோதல்… கொளுந்து விட்டெரியும் தெலங்கானா..!!

Author: Babu Lakshmanan
29 November 2022, 4:01 pm
Quick Share

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை காரோடு வைத்து போலீசார் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா. இவர் தெலங்கானாவை மையமாக வைத்து ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்னும் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து, தனது கட்சியை விரிவுபடுத்தும் விதமாக, அவர் தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்த பாதயாத்திரையின் போது ஆளும் கட்சியான டிஆர்எஸ் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருகிறார். இதனால், டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகளும் ஷர்மிளாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வாரங்கலில் நேற்று முன்தினம் இரவு, ஷர்மிளா பயன்படுத்தும் கேரவான் பேருந்தை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர் பேருந்தில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் இரு கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து பேசிய ஷர்மிளா, “பாத யாத்திரையை நிறுத்தவே பேருந்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தீயிட்டு கொளுத்தி பயமுறுத்துகிறார். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். எனது பாத யாத்திரை தொடரும்” என கூறினார்.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் அவர் காரில் இருந்து முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது போலீஸார் தடுத்து நிறுத்தினர். காரை அவரே ஓட்டி வந்த நிலையில், அவரை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், அவர் மறுப்பு தெரிவித்ததால், காரை கிரேனின் உதவியுடன் கட்டி சாலையில் இழுத்துச் சென்றனர்.

இதனால், அங்கு திரண்டிருந்த சர்மிளாவின் கட்சியினர் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைய சர்மிளா முயன்றார்.

அப்போது, அவரை தடுத்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 364

0

0