ஸொமேட்டோ விவகாரம்: வீடியோ வெளியிட்ட பெண் மீது வழக்கு பதிவு; திடீர் திருப்பம்

Author: Udhayakumar Raman
15 March 2021, 10:25 pm
Quick Share

ஸொமேட்டோ டெலிவரி ஊழியரால் தான் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட பெண் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 9-ம் தேதி ஸொமேட்டோ டெலிவரி ஊழியரால் தான் தாக்கப்பட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்ஸர் ஹிதேஷா சந்திரனி, முகத்தில் ரத்தக் காயத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவில், உணவை தாமதமாக டெலிவரி செய்ததால், எனக்கும் ஸொமேட்டோ ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அவர் என்னை மூக்கில் குத்திவிட்டு ஓடிவிட்டார்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவன ஊழியருக்கு எதிராக பலரும் கருத்துகளைப் பதிவிட ஆரம்பித்தனர். எனவே ஸொமேட்டோ நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும், ஸொமேட்டோ தன் ட்விட்டர் பக்கத்தில்,நடந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம். எங்கள் உள்ளூர் பிரதிநிதி, ஹிதேஷாவைத் தொடர்பு கொள்வார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்வார்” என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் கதையில் திடீர் திருப்பமாக, ஹிதேஷா சந்திரனி தன்னை செருப்பால் தாக்கியதாகவும்,

தன்னை தற்காத்துக்கொள்ள, அவரை தள்ளியபோது அடிபட்டுவிட்டது என்றும் காவல்துறை விசாரணையின் போது ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் தெரிவித்திருந்தார். ஊடகங்களிடமும் பேசிய அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், இந்த சம்பவத்தால் தன் வேலை பறிபோனதுடன், வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹிதேஷா சந்திரனி மீது ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் காவல் நிலையத்தில் புகார். அதன்பேரில் ஹிதேஷா சந்திரனி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

Views: - 68

0

0