40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவசரக் கூட்டம்… ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்குமா ஐ.நா…??

Author: Babu Lakshmanan
28 February 2022, 9:06 am
Quick Share

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இன்று கூடுகிறது.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தலைநகர் கிவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறியுள்ளன. டாங்கிகள், போர் விமானங்களின் மூலம் கிவ்வில் உள்ள முக்கிய ராணுவப் பகுதிகளை தாக்கி வருகின்றன. உக்ரைனுக்கு ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

அதேவேளையில், அண்டை நாடுகளான எஸ்டோனியா, லாட்வியா, போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, மாஸ்கோ உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளன.

5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், நியூயார்க்கில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஐ.நா., பொதுசபை கூட்டம் இன்று அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது. அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வாக்களிப்பில் பங்களிக்கவில்லை. ஏற்கனவே, ரஷ்யா பிடிக்கக் கூடிய இடங்கள் எதுவும் அங்கீகரிக்கப்படாது என ஜி7 அமைப்பு அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி போரை தொடர்ந்து வரும் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Views: - 1422

0

0