தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Author: kavin kumar
20 February 2022, 3:49 pm
Quick Share

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும்பங்குனி உத்திரப் பெருவிழா நடத்தப்பட்டு அதன் நிறைவாக உலகப் பிரசித்தி பெற்ற ஆழித் தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு வரும் மார்ச் 15ம் தேதி, பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி ஆழி தேரோட்ட விழா நடைபெறுகிறது. அதையொட்டி இன்று காலை பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வீதி உலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரித்து தியாகராஜ சன்னதி எதிரில் உள்ள 54 அடி உயரமுள்ள கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு இன்று காலை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை சந்திரசேகரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஒவ்வொரு நாள் இரவும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. வரும் 9ஆம் தேதி வசந்த மண்டபத்தில் தியாகராஜ சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் வசந்த உற்சவம் நடைபெறும். தொடர்ந்து வரும் மார்ச் 15ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Views: - 777

0

0