வத்திக்குச்சிக்கு வந்த சோதனை : தயாரிப்பு பணிகள் முடக்கம்.!!

13 May 2020, 5:03 pm
Match Stick - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் யாரிக்க தேவையான மரத்தடிகள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தீக்குச்சி ஆலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

தீப்பெட்டி தயாரிப்பின் இதயமாக இருப்பது குச்சிகள் தான். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரம் மற்றும் தமிழகம் முழுவதிலும் தீக்குச்சி தயாரிப்பில் சுமார் 450 கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த குச்சிகள் தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சில வகை மரத்தடிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி பகுதியில் 150க்கும் மேற்பட்ட தீக்குச்சி தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இங்கிருந்து கோவில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி, சாத்தூர், குடியாத்தம், தர்மபுரி மாவட்டங்களில் இயங்கும் தீப்பெட்டி ஆலைகளுக்கு தீக்குச்சிகள் அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலைகள் மூடப்பட்டன. சில நிபந்தனைகளுடன் ஆலைகள் திறக்கப்படலாம் என்று அரசு அறிவித்ததை தொடர்ந்து குச்சி தயாரிக்கும் ஆலைகள் திறக்கப்பட்டன.

சில நாள்கள் இயங்கிய நிலையில் மரத்தடிகள் இல்லாத காரணத்தினால் தற்பொழுது பெரும்பாலன ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் முன் பதிவு செய்த வெளிநாடு மரத்தடிகள் துறைமுகத்தில் தேங்கி கிடந்த நிலையில் அவை வெளியே எடுக்கப்பட்டு, சில ஆலைகளில் மட்டும் குச்சி தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. பெரும்பாலன ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழுந்துள்ளனர். அரசு திறக்க அனுமதி கொடுத்தும் மரத்தடிகள் இல்லாத காரணத்தினால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து தீக்குச்சி தயாரிப்பாளர்கள் கூறுகையில் உள் மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களில் குச்சிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மரங்களை வெட்ட தொழிலாளர்கள் தற்பொழுது கிடைக்கவில்லை என்றும், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் தொழிலாளர்கள் மரங்களை வெட்ட செல்ல முடியவில்லை என்றும், ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டுள்ள மரத்தடிகளை லாரிகளில் கொண்டு வரமுடியாத நிலை இருப்பதால், தீக்குச்சி உற்பத்தி செய்ய முடியமால் ஆலைகளை மூடி வைத்துள்ளதாகவும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டு இருந்த வெளிநாட்டு மரத்தடிகளை கொண்டு சில ஆலைகள் செயல்படுவதாகவும், வெளிநாட்டு மரத்தடிகள் விலையும் தற்பொழுது உயர்;நதுள்ளது என்றும், இதனால் 50 நாள்களாக தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருவதாகவும், தொடர்ந்து ஆலை செயல்படாத காரணத்தினால் குச்சிதயாரிக்கும் இயந்திரங்கள் பராமரிப்பு செய்ய தனியாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மரத்தடிகள் எளிதில் கொண்டு வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அரசு ஆலைகளை திறக்க சொல்லியும் தங்களுக்கு மரத்தடிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், ஆலைகளை திறந்து எவ்வித நன்மையும் இல்லை, மரத்தடிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீக்குச்சி தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.