பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..?

26 January 2021, 4:19 pm
Agriculture_UpdateNews360
Quick Share

2022’க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிப்ரவரி 1’ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள 2021-22 பட்ஜெட்டில் விவசாய கடன் இலக்கை சுமார் ரூ 19 லட்சம் கோடியாக உயர்த்த வாய்ப்புள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில், விவசாய கடன் இலக்கை ரூ 15 லட்சம் கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறைக்கான கடன் இலக்கை அதிகரித்து வருகிறது. இந்த முறையும் 2021-22 ஆம் ஆண்டுக்கான இலக்கு சுமார் ரூ 19 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

“வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் விவசாய கடன் வழங்குவதில் தீவிரமாக செயல்படுகின்றன. நபார்ட் மறுநிதியளிப்பு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். 2020-21’ஆம் ஆண்டிற்கான விவசாய கடன் இலக்கு ரூ 15 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என 2020-21 வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்கும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மீறி விவசாய கடன் வழங்குவது பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2017-18’ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு 11.68 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இது அந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ரூ 10 லட்சம் கோடி இலக்கை விட மிக அதிகம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேபோல், 2016-17 நிதியாண்டில் ரூ 10.66 லட்சம் கோடி மதிப்புள்ள பயிர் கடன்கள் வழங்கப்பட்டன. இது கடன் இலக்கான ரூ .9 லட்சம் கோடியை விட அதிகமாகும். அதிக விவசாய உற்பத்தியை அடைவதில் கடன் ஒரு முக்கியமான உள்ளீடாகும்.

பொதுவாக, விவசாயக் கடன்கள் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. எனினும், குறுகிய கால விவசாயக் கடனை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கும் விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவுவதற்கும் அரசாங்கம் வட்டித் தொகையை வழங்கி வருகிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற பயனுள்ள விகிதத்தில் ரூ 3 லட்சம் வரை குறுகிய கால விவசாயக் கடன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் 2 சதவீத வட்டி மானியத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

உரிய தேதிக்குள் கடன்களை உடனடியாக திருப்பிச் செலுத்துவதற்கு விவசாயிகளுக்கு 3 சதவீத கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன் மூலம் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைகிறது.

Views: - 0

0

0