இஎம்ஐ காலக்கெடு மீண்டும் நீட்டிப்பா..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..!
28 September 2020, 12:35 pmகடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தற்காலிக கால அவகாசத்தை நீட்டிக்கவும், கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கடன் தொகைக்கான வட்டி மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யவும் கோரும் இரண்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்தது.
அரசாங்கத்தின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் இந்த பிரச்சினைகள் அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் 2-3 நாட்களுக்குள் ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறினார்.
ரிசர்வ் வங்கி, இந்திய அரசு அல்லது வங்கிகள் எடுத்த அனைத்து முடிவுகளையும் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் முன்னதாக செப்டம்பர் 10’ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் ரிசர்வ் வங்கிக்கு அவகாசம் அளித்திருந்தது.
முந்தைய விசாரணையில் உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 31’ஆம் தேதி வரை என்.பி.ஏவாக அறிவிக்கப்படக்கூடாது என்று கூறியது.
“இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக நடந்து வரும் சுகாதார பேரழிவோடு கடுமையான நிதி சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. அவசரகால சூழ்நிலையில் பல்வேறு மக்கள் வேலைகளை இழந்துள்ளனர் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்களும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
சில நிபந்தனைகளின் கீழ் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தடை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் பொருளாதார மந்தநிலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறைகள் அடையாளம் காணப்படுவதாகவும் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி முன்னர் நீதிமன்றத்தில் தெரிவித்தன.
இந்நிலையில், இஎம்ஐ செலுத்துவதில் காலக்கெடு நீட்டிப்பு குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அக்டோபர் 5’ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.