மீண்டும் ஒரு ஆணவக்கொலை… மகளை திருமணம் செய்த வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 2:00 pm
Telangana Murder - Updatenews360
Quick Share

தெலங்கானா : ஐதரபாத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்ததால் இளைஞரை வாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியிலுள்ள கொல்சாவாடி பகுதியில் வசித்து வரும் மார்வாடி மஹிந்தர் பன்வர். இவருடைய மகன் நீரஜ் பன்வர் (வயது 22).

நீரஜ் பன்வர் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சஞ்சனாவின் காதல் விவகாரம் தெரிந்த குடும்பத்தினர் நீரஜ் பன்வரை மிரட்டினர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய சஞ்சனா மற்றும் நீரஜ் பன்வர் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தைத் தொடர்ந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். தற்போது நீரஜ் மற்றும் சஞ்சனா விற்கு 3 மாத குழந்தை உள்ளது.

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி சஞ்சனா திருமணம் செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் பேகம் பஜார் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த நீரஜ் பன்வவரை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இடித்து கீழே தள்ளினர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நீரஜ்ஜை இரும்பு கம்பி கற்கள் கொண்டு சராமாரியாக தாக்கியும் வாள் 20 முறை குத்தி உள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த நீரஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நீரஜ் உயிரிழந்ததை உறுதி செய்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீரஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகள் கர்நாடக மாநிலத்திற்கு தப்பிச் சென்றதை அறிந்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீரஜ் படுகொலையைத் தொடர்ந்து பேகம் பஜார் மார்வாடி வியாபாரிகள் பந்துக்கு அழைப்பு விடுத்தனர். இதன் காரணமாக பேகம் பஜார் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத் கரூர் நகர் பகுதியில் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

தற்போது 15 நாட்கள் இடைவெளியில் மற்றுமொரு ஆணவக்கொலை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 533

0

0