கோட்டையை தகர்த்து வரலாறு படைத்த இளம் இந்திய டீம்: சொந்த மண்ணில் அசிங்கப்பட்ட ஆஸி!

19 January 2021, 2:18 pm
Indian Cricket Team - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டியின் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி காபாவில் நடந்தது . இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள், இந்திய அணி 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு இளம் சுப்மான் கில் 91 ரன்கள் அடித்து கைகொடுக்க, இந்திய அணி வெற்றியை நோக்கி முதல் படிக்கு முன்னேறியது. தொடர்ந்து புஜாரா ஒருபுறம் நிதானமாக ரன்கள் சேர்க்க மறுபுறம் ரிஷப் பண்ட் மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்க்கத்துவங்கினார். ஒருகட்டத்தில் புஜாரா (56) அவுட்டாக, பண்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் நல்ல கம்பெனி கொடுத்தார். ஆஸ்திரேலிய பவுலர்கள் பண்ட் விக்கெட்டை குறிவைக்க எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக சுந்தர் அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. கடைசி 15 ஓவரில் மிகப்பெரிய திருப்பு முனையாக இப்போட்டியில் அமைந்தது. வாஷிங்டன் சுந்தர் வெளியேறிய பின் பண்ட் இந்திய அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்துச் சென்றார். இதற்கிடையில் மாயங்க் அகர்வால், சார்துல் தாகூர் ஆகியோரின் விக்கெட்டை ஆஸ்திரேலிய பவுலர்கள் கைப்பற்றிய போதும் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டவத்தை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதுவரலாறு படைத்தது. 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக திகழ்ந்த காபா மைதானத்தில் வெற்றியை பதிவு செய்ததோடு, இந்திய அணி 2-1 என தொடரை வென்று அசத்தியது. மறுபுறம் காபா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி வாய் பேசி வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளது.

Views: - 8

0

0