உத்தரகாண்ட் வெள்ளம்: இந்திய வீரர்கள் இரங்கல்!
7 February 2021, 10:39 pmஉத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை திடீரென்று சரிந்தது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக ரைனி கிராமத்தில் தவுளிகங்கா நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உத்தர்காண்ட்டில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு எனது இரங்களை தெரிவிக்கிறேன். மீட்புப்பணிகள் உதவி தேவைப்படும் அனைவருக்கும் உதவிக்கரமாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரர்த்தனை மேற்கொள்கிறேன். இதில் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரகாண்டில் இருந்து வெள்ளத்தால் வெளியான செய்திகள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அசாமில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்வதாகவும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உடன் இது குறித்துப் பேசியதாகவும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
0
0