விருதாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்கள் திருட்டு: குடமுழுக்கு நடந்து முடிந்த ஒருமாதத்தில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
1 March 2022, 10:23 am
Quick Share

விருதாசலம்: சமீபத்தில் குடமுழுக்கு நடந்து முடிந்த 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கோபுரக் கலசங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்ட இக்கோவிலில் 5 மூர்த்திகள், 5 தேர்கள், 5 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 நந்திகள், 5 கொடிமரங்கள் என அனைத்தும் 5ஆக அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும்.

இக்கோவில் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

இந்த 3 கலசங்களும் 3 அடி உயரம் கொண்டவை என்றும், 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து கலசங்கள் திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் நள்ளிரவில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 697

0

0