தாய் மற்றும் சிசுவை சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து : காலையில் பிறந்த குழந்தை..மாலையில் உயிரிழந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 4:38 pm
Ambulance Accident Dead -Updatenews360
Quick Share

கோவை : கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பச்சிளம் குழந்தையும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 26) இவரது மனைவி ரம்யா. இவருக்கு இன்று காலை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் குழந்தைக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து தனியார் ஆம்புலன்சில் குழந்தை, குழந்தையின் தந்தை சிவசங்கர், உறவினர்கள் பழனிச்சாமி, சகுந்தலா, வள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி வழியாக கோவை வந்தனர்.

அப்போது ஆம்புலன்சை ரவீந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். ஆம்புலன்ஸ் மலுமிச்சம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் ஆண் குழந்தை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த பழனிச்சாமி, வள்ளி ஆகிய இருவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தலையில் காயமடைந்த சகுந்தலா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மதுக்கரை போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் மூலம் சாலையில் கிடந்த ஆம்புலன்சை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1187

0

0