இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்து : 2 வடமாநில தொழிலாளர்கள் பலி… 3 பேர் படுகாயம்…

Author: kavin kumar
20 February 2022, 4:03 pm
Quick Share

மயிலாடுதுறை : சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் தனியார் இறால் தீவனம் தயாரிக்கும்( பிஸ்பி ) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

அப்போது தொழிற்சாலையில் அமைந்துள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பாய்லர் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரான், பல்ஜித்ஓரான் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் ரகுபதி, மாரிதாஸ், ஜாவித் ஆகிய 3 பேரையும் சக ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதில் ரகுபதி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறால் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் விபத்து ஏற்பட்டதையொட்டி அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Views: - 396

0

0