சொகுசு கார் விற்பனையில் ரூ.31 லட்சம் நூதன மோசடி… வங்கியையும் ஏமாற்றிய பெண் உள்பட 3 பேர் தலைமறைவு!!

Author: Babu Lakshmanan
3 டிசம்பர் 2022, 9:12 காலை
Quick Share

கோவை : சொகுசு காரை விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை இசிஆர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் மோகன் பாபு( 42). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக இவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி விற்பது வழக்கம். இவரிடம் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் சொகுசு கார்கள் சிலவற்றை வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கி விற்றுள்ளார்.

மேலும், மோகன் பாபு வெளியூர்களில் சொகுசு கார்களை விற்பனை செய்பவர்களிடம் தனது டிரைவரை அனுப்பி காரை சரி பார்ப்பது வழக்கம். பின்னர், காருக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் உடனடியாக பணத்தை ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்த வர்ஷினி என்பவருக்கு சொந்தமான பென்ஸ் கார் ஒன்று 32 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு இருப்பதாக தெரிவித்தார். மேலும், பொள்ளாச்சிக்கு வந்து காரை பணம் கொடுத்து எடுத்துச் செல்லலாம் என கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து, மோகன் பாபு தனது டிரைவர் பிரவீன் என்பவரை அனுப்பி காரை பார்த்து விபரங்களை கூறும்படி சொல்லி இருந்தார். அதன்பேரில், பொள்ளாச்சி வந்த டிரைவர் பிரவீன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள ஹோட்டலில் வைத்து காரை பார்த்தனர்.

தொடர்ந்து பிரவீன் தனது உரிமையாளர் மோகன் பாபுவிடம் அனைத்தும் சரியாக இருப்பதாக கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து, மோகன் பாபு காரின் உரிமையாளர் வர்ஷினி என்பவரின் வங்கி கணக்கிற்கு 31 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பின்னர் பேசிய சுப்பிரமணியன், கார் தற்சமயம் லோனில் இருப்பதாகவும் வங்கியில் அதற்குரிய தொகையை செலுத்தி சில நாட்களில் காருக்குரிய ஆவணங்கள் அனைத்தையும் வங்கியில் இருந்து பெற்று அனுப்பி வைப்பதாகவும் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து டிரைவர் பிரவீன் காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.

அதன் பிறகு பலமுறை மோகன் பாபு காரை விற்ற வர்ஷினி மற்றும் அவரது மேலாளர் நவீன் குமார் மற்றும் காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியன் ஆகியோரை தொடர்பு கொண்டார். ஆனால், அவர்கள் சரியான முறையில் பதில் அளிக்காமல் தொடர்ந்து காருக்குரிய ஆவணங்களையும் தராமல் ஏமாற்றி வந்தனர்.

பின்னர் அவர்கள் குறித்து விசாரித்த போது வர்ஷினி கோவை திருச்சி சாலை கிருஷ்ணா காலனி பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் குடியிருப்பது தெரிய வந்தது. காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியனிடம் கேட்டபோது, தனக்கு ஒன்றும் தெரியாது என பதில் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து மோகன் பாபு கோவை மாநகர போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வர்ஷினி அவரது மேனேஜர் நவீன் குமார் மற்றும் காரை வாங்கி கொடுத்த சுப்பிரமணியன் ஆகியோர் மூவரும் நூதன முறையில் சொகுசு காரை மட்டும் விற்று விட்டு, அதற்குரிய ஆவணங்களை வங்கியில் வைத்து பல லட்ச ரூபாயை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமலும், காரை வாங்கியவருக்கு அதற்குரிய ஆவணங்களை கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வர்ஷினி, நவீன் குமார், சுப்பிரமணியன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 450

    0

    0