கோவையில் சர்வதேச விமான நிலையம் அமையுமா…? ஹைகோர்ட் வெளியிட்ட முக்கிய தீர்ப்பு

18 August 2020, 8:35 pm
Quick Share

சென்னை: கோவையில் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2017 ம் ஆண்டு தொடங்கியது. அதை எதிர்த்து, கோவையை சேர்ந்த 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

மக்களிடம் கருத்துகளை கேட்காமல்,  நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.  இதையடுத்து, நிலத்தை  கையகப்படுத்த தடை விதித்தது.

ஆனால் தடையை நீக்க கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந் நிலையில் வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,  விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை, நிலத்துக்கான தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர், அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விட்டதாகவும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை தொடரலாம் என்றும் ஆணையிட்டு உள்ளனர்.

Views: - 29

0

0