விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி.. படமெடுத்து கொத்திய நாகப் பாம்பு : அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2023, 6:39 pm
Snake - Updatenews360
Quick Share

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 39). இவரின் இரண்டாவது மகள் சஷ்மிதா ஸ்ரீ (வயது 3).

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு குழந்தையை கடித்து உள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் 2 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த செவிலியர்கள் இங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்று கூறி பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது

அதனை தொடர்ந்து சிறுமியை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பாம்பு கடிக்கு மருந்து இருந்தும் சிறுமிக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கவுரிசங்கர், பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் உறவினர்களும் பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

மூன்று வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழப்பு மருந்து இல்லாததால் ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் கொண்டு அரசு மருத்துவமனைகளில் வழங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Views: - 245

0

0