நீட் தேர்வில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்: நேரில் அழைத்து பாராட்டிய கோவை மாவட்ட ஆட்சியர்..!!

Author: Rajesh
7 February 2022, 3:49 pm
Quick Share

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘நீட்’ தேர்வு மற்றும் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வுக்கு 10 பேர் தேர்வாகினர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் சுவேதா, யுவராஜ், சுர்தி, அபர்ணா, தேவி, அப்ஃரின் ஜெகன், தாரணி, பூர்ணிமா, சங்கீதா சந்திர தேவி ஆகியோர் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு மருத்துவ படிப்புக்கு சேர்க்கை பெற்ற 10 அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில் “பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் ‘நீட்’ தேர்வு மூலம் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 968

0

0