‘மாட்டுக்கறி சாப்பிட்டு இப்படி ஆடுறயா..?’ அரசுப் பள்ளியில் மாணவி பரபரப்பு புகார் ; கோவை மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
24 November 2023, 10:15 am
Quick Share

கோவையில் ஏழாம் வகுப்பு மாணவி உணவு முறை குறித்து பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளித்து இருப்பது தொடர்பாக மாவட்ட சிறுபான்மை நலத்துறை, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

கோவை துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி பயிற்சி ஆசிரியர் அபிநயா, ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்து ஆடுகின்றாயா என உணவு முறை குறித்து பேசியதுடன், அடித்ததாகவும், பர்தாவால் காலனிகளை துடைக்க சொன்னதாகவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இது குறித்து கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பள்ளியில் புதன் கிழமை நேரடியாக விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தனது விசாரணை அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் வழங்கினார்.

இதனிடையே, மாணவியின் தரப்பில் ஆட்சியரை சந்தித்து இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இந்த விவகாரம் குறித்து மாவட்ட சிறுபான்மை நல அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் இணைத்து விசாரணை நடத்திட உத்தரவிட்டார்.

இந்த விசாரணையானது விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளியில் சர்ச்சைக்கு காரணமாக இருந்த பயிற்சி ஆசிரியர் அபிநயாவை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தும் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 207

0

0