மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவன் உயிரிழப்பு ; ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் போது நேர்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 12:31 pm
Quick Share

கடலூர் அருகே ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் பொழுது அருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி ஜடிஜ மாணவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அரசு வயது (17). இவர் பண்ருட்டி சக்தி ஐடிஐயில் முதலாமாண்டு எலக்ட்ரீசியன் படித்து வருகிறார். அந்த சக்தி ஐடிஐயில் எலக்ட்ரீசியன் ஆசிரியராக பணிபுரியும் பிரபாகரன் என்பவர், இவரது மனைவிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வளைய காப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக, தாம்பூல பைக்கு தேவையான தேங்காயை தயார் செய்வதற்காக, மாமனார் வீடான ஒறையூருக்கு ஐடிஐ வகுப்பு மாணவர்கள் அரசு மற்றும் ஆதி ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு ஆசிரியர் பிரபாகரன் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்றுள்ளனர்.

அங்கு ஆதி பறித்த தேங்காயை அரசு எடுத்துக் கொண்டிருந்தபோது, அருந்த மின் கம்பி கையில் பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஐடிஐ மாணவன் அரசு உடலை புதுப்பேட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து உடலை உறவினர்களுக்கு தெரியாமல் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்த சென்ற நிலையில், தகவல் அறிந்த உயிரிழந்த மாணவன் உறவினர்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி உடலை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்ப முடியும் என்று ஆவேசம் அடைந்து ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கிக்கொண்டு கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு உடலை மீண்டும் பண்ருட்டி பிணவரையில் வைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 338

0

0