கல் குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதல் : 300 பேர் அராஜகம்.. ஆட்சியர் அலுவலகத்தில் களேபரம்.. ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 8:53 am
Perambalur -Updatenews360
Quick Share

கல் குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதல் : 300 பேர் அராஜகம்.. .ஏலத்தை ரத்து செய்த ஆட்சியர்!!!

தருமபுரி மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் உள்ளிட்ட 31 கிராமங்களில் உள்ள கல் குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

இந்த நிலையில் திமுகவினரை தவிர வேறு யாரும் விண்ணப்பிக்க கூடாது என்றும், மற்றவர்கள் விண்ணபிப்பதால் போட்டி ஏற்படும், மேலும் அதிக விலைகொடுக்கக் கூடும் என திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கக்கூடிய பாஜகவை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் கல் குவாரி ஏலத்துக்காக விண்ணப்பிக்க வந்துள்ளார்,.

அப்போது அங்கு திரண்ட திமுகவினர் கலைச்செல்வனுடைய விண்ணப்பத்தை கிழித்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வருவாய் ஆய்வாளர், உதவி புவியியல் இயக்குநர் உள்ளிட்டவர்களை தாக்கி அராஜகம் செய்தனர். சுமார் 300 பேர் கொண்ட திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து களேபரம் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

அங்கிருந்த பெரம்பலுார் டி.எஸ்.பி., பழனிசாமியை கீழே தள்ளி விட்டனர். கனிமவளத் துறை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, தி.மு.க.,வினர் அடித்து நொறுக்கினர்.

இதையறிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் கற்பகத்தை, தி.மு.க.,வினர் ஒருமையில் பேசினர். அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து கலெக்டர், எஸ்.பி., ஷ்யாமளாதேவியை போனில் அழைத்து, அங்கு உடனடியாக வருமாறு தெரிவித்தார்; எஸ்.பி., வந்தார்.

தாக்குதலுக்குள்ளான ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், முருகேசன் உள்ளிட்ட மூன்று பேரும், கலெக்டர் அலுவலக அறை அருகில் உள்ள பார்வையாளர் காத்திருப்பு அறையில் தஞ்சம் புகுந்தனர்.

போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன் மற்றும் குண்டர்கள், 300க்கும் மேற்பட்டோர் அந்த அறையில் புகுந்து, அறையில் இருந்த முருகேசனின் பேன்டை உருவி தாக்கினர்.

அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து வந்து, போலீசார் முன்னிலையில் கடுமையாக அடித்து, உதைத்தனர். செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்கள் சிலரை, வீடியோ, போட்டோ எடுக்கக்கூடாது என மிரட்டியதுடன், ‘டிவி’ நிருபர் ஒருவரையும் தாக்கினர்.

சத்தியம் ‘டிவி’ நிருபர் மாரியப்பன் என்பவரின் மொபைல் போனை வலுக்கட்டாயமாக பறித்து சென்றனர். இதனால், கலெக்டர் அலுவலகம், கலவர களமாக காட்சியளித்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், பெண் அலுவலர்கள், அலுவலகத்தில் உள்ள கதவை சாத்திக் கொண்டு, உயிர் பயத்தில் நடுங்கினர்.

தாக்குதல் நடத்திய 300 பேரும் முகத்தை துண்டால் கட்டிக்கொண்டு, தாக்குதலை அரங்கேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டர்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

இதனால், கல் குவாரி டெண்டரை ரத்து செய்து, பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நிர்வாக காரணங்களால், பெரம்பலுார் மாவட்ட கனிமவள குவாரிகள் ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 253

0

0