கோவை மேயர் பதவி யாருக்கு ?: போட்டி போடும் மூன்று வேட்பாளர்கள்!!

Author: Rajesh
24 February 2022, 11:12 am
Quick Share

கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்து கோவையின் மேயர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் 4ம் தேதி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகின்றன.

கோவையில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திமுக., கவுன்சிலர்களாக பதவியேற்க உள்ள மூன்று பெண்கள் மேயர் பதவிக்கான வரிசையில் முன்னிலையில் உள்ளனர்.

இதில் முதலாவதாக இருப்பவர் இலக்குமி இளஞ்செல்வி. கோவை 52வது வார்டு கவுன்சிலராக பதவியேற்க உள்ள இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கின் மனைவி. நா.கார்த்திக் ஏற்கனவே கோவையின் துணை மேயராக இருந்தவர். மேலும், இலக்குமி இளஞ்செல்வியும் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர். மாமன்றம் குறித்த அனுபவம் இருவருக்குமே இருப்பதால் இவருக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல மற்றொருவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள் நிவேதா. 22 வயதே ஆன நிவேதா முதுகலை படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே தேர்தலில் போட்டியிட்டார். கோவை 97 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள இவர் மேயர் பதவியை பெற வாய்ப்பு உள்ளது. இவரது தந்தை சேனாதிபதி எப்படியாவது மேயர் பதவியை வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார். மகள் வெற்றி பெற்ற கையோடு, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். ஸ்டாலினிக்கு ஒரு வெற்றி வாளையும் பரிசளித்துள்ளார் நிவேதா.

இவர்களை போலவே மேயர் பதவிக்கான பட்டியலில் இருப்பவர் மீனா லோகு, இவர் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவர். அதோடு, திமுக மகளிரணி துணை செயலாளராகவும் இருந்தவர். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த காரணத்தால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.

இவர்கள் அல்லாமல் கோவையின் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள காங்கிரஸ் மேயர் பதவியை பெற வேண்டும் என்று காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதனிடையே கோவையின் மேயர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Views: - 668

0

0