வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்… அனுமதியின்றி மணல் எடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

Author: Babu Lakshmanan
12 January 2023, 10:50 am
Quick Share

வேலூர் மாவட்டம் வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாக பேசிய வேலூர் திமுக கவுன்சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுதாகர் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தல், அவதுராக பேசுதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை:- சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் என்பவரை கடந்த 10.01.2023 அன்று பணியில் இருந்த போது, அங்கு வந்த 24 வது வார்டு திமுக உறுப்பினர் சுதாகர், அவருக்கு சொந்தமான நிலத்தில் செயல்பட்டு வரும் செங்கள் சூளையை கிராம உதவியாளர் எனது அனுமதி இல்லாமல் எப்படி புகைப்படம் எடுத்தார் என சத்தம் போட்டுள்ளார்.

அதற்கு, தங்கள் செங்கல் சூளைக்கு அனுமதி இல்லாமல் மண் எடுத்து செல்வதாக வந்த புகாரையடுத்தே விசாரிக்க சொன்னேன் என கூறியதற்கு, வருவாய் ஆய்வாளரை அவதுறாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வருவாய் ஆய்வாளர் யுவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 666

0

0