செல்போனில் வாக்குவாதம்… திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய சக திமுக நிர்வாகி ; தப்பி ஓடிய இருவருக்கு போலீஸார் வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 7:39 pm
Quick Share

தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே திமுக பிரமுகர்களுக்கிடையே இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதில், அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய திமுக பிரமுகர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மாரீஸ்குமார் (30) என்பவர் புதூர்பாண்டியபுரம் திமுக கிளை செயலாளராக உள்ளார். மேலும், கச்சேரிதளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் கண்ணன் (27) என்பவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 25ம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிகட்டிடம் மற்றும் நிழற்குடை திறக்கப்பட்ட செய்தியானது நேற்று பிரபல தினசரி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இந்தச் செய்தியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா புகைப்படமானது பதிவாகியுள்ளது.

அதில், கண்ணன் என்பவர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா படத்தை மறைத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு மாரீஸ்குமார், கண்ணன் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கண்ணனுக்கும் மாரிஸ்குமாருக்கும் இடையே செல்போனில் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்த்துவிட்டு இரவு சுமார் 10.15 மணியளவில் ஓட்டப்பிடாரத்திலிருந்து குறுக்குச்சலையை நோக்கி சென்ற மாரீஸ்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கண்ணன் மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவரும் மாரீஸ்குமாரின் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று, மீனாட்சிபுரம் அருகே மாரீஸ்குமாரை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், கண்ணன் மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவரும் சேர்ந்து கையில் வைத்திருந்த அரிவாளால் மாரீஸ்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதில் மாரீஸ் குமாருக்கு தலையின் வலது பக்கம் கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரீஸ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கண்ணன் மற்றும் அவருடன் வந்த நபர் மீது ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 257

0

0