80 ஆண்டு காலத்தில் ஏற்படும் வெறுப்பை 8 மாதத்தில் சம்பாதித்த திமுக : அண்ணாமலை விமர்சனம்

Author: kavin kumar
8 February 2022, 6:39 pm
Quick Share

கன்னியாகுமரி : 80 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் ஏற்படும் வெறுப்பு கடந்த 8 மாத திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – மாநில தலைவர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது “தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாத கையால் ஆகாத அரசாக திமுக அரசு உள்ளது. நீட் மசோதாவை 2 வது முறையாக ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர். முதல் முதலாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தான் அகில இந்திய அளவிலான மருத்துவ கல்லூரி படிப்பிற்கு தேர்வு தேவை என அறிவித்தன.

திமுக பொய் பேசி தான் ஆட்சியில் இருக்கிறார்கள். கடந்த 80 ஆண்டுகளாக ஆட்சி செய்தால் எவ்வளவு வெறுப்பு ஏற்படுமோ அதே வெறுப்பு கடந்த 8 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ஊழல்வாதிகள் ஆக மாறி விட்டனர். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐசியூவில் படுத்துக்கொண்டு திமுக என்னும் ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக 200 வேட்பாளர்களை பாஜக கட்சி நிறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 86 சதவீத பேரூராட்சிகளில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவையெல்லாம் மாநில அளவில் பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்று கூறினார். முன்னதாக இந்த இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டி இன்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாநிலத் தலைவர் சால்வை அணிவித்து கவுரவித்தார். மாவட்டம் முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Views: - 890

0

0