‘உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு எங்களுக்கு இந்த கதியா’..? தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து திமுக எம்எல்ஏ கொலை மிரட்டல்… புலம்பும் ஊழியர்கள்..!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 8:27 pm
Quick Share

செங்கல்பட்டு : தனியார் தொழிற்சாலை நிறுவன ஊழியர்களை திமுக எம்எல்ஏ மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரத்தில் 20 ஆண்டுகளாக கார்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுமார் 230 கோடி அளவிற்கு ஊழல் செய்து வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்று தலைமறைவாகியுள்ளார். இந்த நிறுவனத்தின் இடமானது 10 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்பொழுது நிறுவன இடத்தை வாங்கிய நபர் சட்டமன்ற உறுப்பினர் மூலம் அந்த இடத்தை காலி செய்ய தற்பொழுது உள்ள முதன்மை செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த இடமானது ஐந்து ஆண்டுகளுக்கு காலி செய்யக்கூடாது என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. அதற்கான உரிய வாடகையையும் முறையாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பேசிய தொழிற்சாலை உற்பத்தி மேலாளர் விஜயகுமார் :- பெரும் நஷ்டத்தில் இருந்த இந்த தொழிற்சாலை கொரியன் நிறுவனத் தலைவர்கள் மூட வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் CEO பல்வேறு முயற்சிகளால், தற்போது நல்ல நிலையில் லாபத்துடன் இயங்கி வருவதாகவும், இதனை நம்பி 120 குடும்பங்கள் பிழைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த ரப்பர் தொழிற்சாலையை இதற்கு முன்னர் கையாண்ட அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் 230 கோடிக்கு மேல் ஊழல் செய்ததாகவும், அதனால் கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்து மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால், CEO & ஊழியர்களின் கடும் சீரமைப்பாள் தற்போது லாபகரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், இயக்குனர் தூண்டுதலில் கம்பெனியின் சிஇஓ அவர்களை குண்டாஸ் வைத்து மிரட்டியதை தொடர்ந்து தற்போது தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அவர்கள் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக புகுந்து நிறுவனத்தின் நுழைவாயில் கதவுகளை உடைத்து, காவலாளிகளை மிரட்டியும் CEO அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் பல காலமாக திமுகவினருக்கு ஓட்டு போட்டதாகவும், தற்போது கூட தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்‌.ராஜா அவர்களுக்கு தான் ஓட்டு பதிவு செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர் அவர்களே நேரில் வந்து கை,காலை உடைப்பேன், உங்களை விட மாட்டேன் என மிரட்டுவது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தங்கள் நிறுவனத்திற்கும், தங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மக்கள் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழ்நிலையில், சட்டமன்ற உறுப்பினரே ஒரு நிறுவன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 378

0

0