பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்த எம்பி கனிமொழி.. பரிசு கொடுத்து கட்டியணைத்ததால் நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 11:25 am
Quick Share

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை சந்தித்து கட்டியணைத்து திமுக எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.

திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த பெண்களிடமும் அவர் உரையாடினார்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த அவர் ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது :- பொதுவாகவே ஆண்களும், பெண்களும் சமம் என்று கூறும் பொழுது, பலரும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பேருந்து ஓட்டுவார்களா? லாரி ஓட்டுவார்களா? என்று அர்த்தமற்ற கேள்விகளை எல்லாம் கேட்பார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பெண் தங்களால் பேருந்தும் ஓட்ட முடியும் என்று காட்டியது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

முன்னதாகவே, ஷர்மிளாவிடம் செல்போனில் பேசியபோது, அவர் கோவைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். நானும் கோவை வந்தால் பேருந்தில் பயணிப்பேன் என்று கூறியிருந்தேன். அதன்படி, இன்று அவருடன் பயணித்திருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒரு தளத்தில் இணைந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அது நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன், என தெரிவித்தார்.

பின்னர் இது குறித்து பேசிய பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, பேருந்து ஓட்டும் பொழுது அவருடன் அதிகமாக பேச முடியாததால் பீளமேட்டில் இறங்கி தன்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் தாங்கள் செய்து தருவதாகவும் கூறினார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வானதி சீனிவாசன் எதுவும் சொல்லாமல் வந்து தனக்கு சர்ப்ரைஸ் அளித்தார். ஆனால் கனிமொழி அவர்கள் வருவதாக ஏற்கனவே தெரிவித்து தற்போது வந்துள்ளார். அவரை தன்னுடன் பேருந்தில் பேசவே விடாமல் இதர பயணிகள் அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். எனவே தன்னுடன் பேச வேண்டும் என்று இறங்கி இருவரும் பேசினோம், என தெரிவித்தார்.

Views: - 287

0

0