12 மணி நேரமே இருந்த மின்சாரம் தற்போது 22½ மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது : அமைச்சர் எம்.ஆர் காந்தி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 6:47 pm
Minister MR Gandhi - Updatenews360
Quick Share

கடந்த 2018 ஆண்டுகளில் 12 மணி நேரம் மட்டுமே இருந்த மின்சாரம் தற்பொழுது 22½ மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மின்சக்தி @ 2047 விழாவில் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் தனியார் திருமண மண்டபத்தில் நாட்டின் 75 வது சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @2047 மின்சாரப் பெருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்தவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கலந்து கொண்டு பேசிய மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் மின்சாரத்துறையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

அதேபோல் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று நீண்ட ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த விவசாயிகளுக்கு ஒரே வருடத்தில் ஒரு லட்சம் பம்பு செட் மின் இணைப்புகளை வழங்கினார்.

மேலும் கடந்த 2018 ஆண்டுகளில் 12 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருந்து வந்த நிலையில் தற்பொழுது 22 ½ மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்தியாவின் மின் துறையின் முக்கிய சாதனைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக அதன் புரட்சிமிகு பயணத்தில் உறுதுணையாக இருந்தவர்களுக்கும் ஆத்மநிர்பர் பாரத் சுயசார்பு கொண்ட பாரதம் என்ற நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு உணர்வை செயல்படுத்தும் சக்தியும், திறனும் கொண்டவர்களுக்கு சமர்ப்பிக்கும் விழாவாகவும் கடந்த 8 ஆண்டுகளில் மின்சார துறையின் சாதனைகளை கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மின்சாரத் துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனை குறும்படம் போட்டு காட்டப்பட்டது.

Views: - 770

0

0