பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருகிறார்கள் என்பது உண்மையா?: விளக்கம் அளித்த நிபுணர்கள்..!!

Author: Rajesh
27 March 2022, 12:27 pm
Quick Share

கோவை: பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருவது என்பது உண்மைக்கு புறம்பானது என்று பிராய்லர் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் பிராய்லர் கமிட்டி, பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில் கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகள், பிராய்லர் கோழியில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும், மருத்துவர்கள், உணவு நிபுணர்கள், சமையல் வல்லுனர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தொடர்ந்து வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கமிட்டி செயலாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, உடலுக்கு புரதம் கொடுக்கும் உணவாக பிராய்லர் கோழி உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த தொழிலில் உள்ளனர்.

மக்காச்சோளம் மற்றும் சோளம் விவசாயிகளும் இந்த தொழிலால் பயன்பெற்று வருகின்றனர். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம் போல் பல நகரங்களிலும், கருத்தரங்கங்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

பிராய்லர் கோழி விலை குறைய வாய்ப்பில்லை. இடுபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இடுபொருட்கள் விலை குறைந்தால் தான் கோழி விலை குறையும். பிராய்லர் கோழி குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம். கோழிக்கு ஊசி போட்டு வளர்ப்பது என்பது தவறு. உயிர் காக்கும் தடுப்பூசி மட்டும் தான் செலுத்தப்படுகிறது.

வளர்ச்சி ஊக்கிகள் கொடுப்பது சட்ட விரோதம், அப்படியாக மருந்துகள் எதுவும் கொடுப்பது அவசியம் இல்லை. முழுக்க அரசின் வவிதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறோம். பிராய்லர் கோழியால் பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வருவது உள்ளிட்ட பல பொய்யான காரணங்களை கூறுகின்றனர்.

இது முற்றிலும் தவறு என்று மருத்துவர்களே விளக்கம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர் இந்த செய்தியாளர் சந்திப்பில் நிர்வாகிகள் ரங்க நாதன், சந்திரசேகர், ராம் ஜி ராகவன், வளர்மதி சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 740

0

0