குறைந்த விலையில் வீடு விற்பனை… கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்த மக்கள் : பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 5:06 pm
Fraud Arrest - Updatenews360
Quick Share

கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நகரில் நாளுக்கு நாள் வித்தியாசமான முறையில் மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பொது மக்களின் சேமிப்பு பணத்தை குறி வைத்து மோசடி கும்பல்கள் இது போன்ற செயல்களை செய்து வருகின்றன.

கோவையில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் தருவதாகவும் வீடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த ஒரு கும்பல் தற்போது போலீஸ் வசம் சிக்கி உள்ளது.

கோவை அவிநாசி ரோடு பகுதியில் ஸ்ரீராம் டவர்சில் ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது இந்த நிறுவனத்தை கோவையைச் சேர்ந்த அன்பு சந்திரன் என்கிற சந்திரன், சரவணகுமார், நாகேந்திரன், தர்மேந்திர குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் பிரேம நந்தினி, சைனி தாமஸ் என்கிற ஷைனி ஜெனிஃபர் ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர் . நிறுவனத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் பேஸ்புக் டுவிட்டர், ஓ எல் எக்ஸ் உள்ளிட்ட தலங்களில் குறைந்த விலையில் வீடுகள் இருப்பதாகவும் வீடுகள் கட்டித் தருவதாகவும் விளம்பரம் செய்தனர்.

இதற்காக ஏற்கனவே வீடுகளை விற்பதற்காக உள்ளவர்களை அணுகி அவர்களிடமிருந்து அதற்குரிய ஆவணங்களின் நகல்களை இந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்திருந்தனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் குறிப்பிடும் விலையை விட குறைந்த விலையை சொல்லி விளம்பரப்படுத்தி உள்ளனர்.

இதை நம்பி வீட்டை வாங்க ஆர்வம் காட்டியவர்களிடம் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அட்வான்ஸ் தொகையாக 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர். மேலும் 60 முதல் 90 நாட்களில் வீட்டை கிரயம் செய்த தருவதாகவும் கூறியிருக்கின்றனர்.

இதே போல இந்த மோசடி கும்பல் கடந்த மூன்று வருடங்களாக ஏராளமனோரிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர். குறிப்பிட்ட வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுப்பவர்கள் வீடு கிரயமாகாமல் தாமதமாவதை அறிந்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் நேரில் சென்று சென்று கேட்கும் பொழுது தாங்கள் இந்த விலைக்கு வீட்டை விற்கவில்லை எனக்கு ஒரு தகவலை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

அட்வான்ஸ் கொடுத்தவர்கள் ஸ்மார்ட் ஹோம் நிறுவனத்தாரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அவ்வாறு கேள்வி கேட்டவர்கள் ஒரு சிலருக்கு அவர்கள் பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானவர்களிடம் தொடர்ந்து அவர்கள் மோசடி செய்த வண்ணம் இருந்தனர். கடந்த மாதத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் 11 லட்ச ரூபாயை மோசடி செய்தனர்.

அந்த புகாரின் பேரில் ஸ்மார்ட் ஹோம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அன்பு சந்திரன், சரவணகுமார், நாகேந்திரன், தர்மேந்திர குமார் ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தங்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த இந்த நான்கு பேரும் தலைமறைவானார்கள்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் நரசிம்மன் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் கடந்த மார்ச் மாதம் பேஸ்புக்கில் இந்த மோசடி நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்துள்ளார்.தொடர்ந்து நிறுவனத்தை நரசிம்மன் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர்கள் ஒரு வீட்டை காண்பித்து 5 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார்கள். ஆனால் அட்வான்ஸ் தொகை பெற்று பல மாதங்கள் ஆகியும் அவர்கள் வீட்டை கிரையம் செய்து தராமல் இருந்து வந்துள்ளனர். இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த நரசிம்மன் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் மீண்டும் ஸ்மார்ட் ஹோம் நிறுவனத்தார் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவரின் மகன் நாகேந்திரன் (வயது 49) மற்றும் காந்திபுரம் மூன்றாவது வீதி பகுதியைச் சேர்ந்த பத்ரு சாமி என்பவரின் மகன் தர்மேந்திர குமார் (வயது 48 )ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அன்பு சந்திரன் என்கிற சந்திரன், சரவணகுமார், பிரேம நந்தினி மற்றும் சைனி தாமஸ் என்கிற சைனீஸ் ஜெனிபர் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்த மேலும் 36 பேர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்களிடமும் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 669

0

0