அரையாண்டு தேர்வு நடக்கும் பள்ளியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள்… அதிருப்தியில் பெற்றோர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 7:53 pm
Quick Share

அரையாண்டு தேர்வுகள் நடக்கும் அரசுப் பள்ளியின் வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தியதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர்.

தமிழகத்தில் தீர்க்கப்படாத பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளும் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வரால் நேற்று முன்தினம் கோவையில் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்முகாம் தமிழகம் முழுவதும் உள்ள பேருராட்சிகளில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சியில் இன்று நடந்த “மக்களுடன் முதல்வர் திட்டம்” சிறப்பு முகாமிற்கு பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யவில்லை என்றும், பள்ளிகளில் அறையாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சித்தையன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் நடத்தியது பெற்றோர்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.

மூன்று அறைகள் கொண்ட பள்ளி வகுப்பறைக்குள் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அரசு துறைகளின் புகார் பெறுவதற்காக அதிகாரிகள் இட நெருக்கடியான சூழலில் நாற்காலிகள் இன்றி மண் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பொதுமக்கள் நீண்ட வரிசையில் மனு அளிக்க காத்திருந்த நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செல்போன்களை பயன்படுத்தி கொண்டும், மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் பலமணிநேரம் காத்திருந்து மனு அளித்துச் சென்றனர்.

அதே போல, மின் வசதி வகுப்பறை கட்டிடங்களில் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில், வகுப்பறையின் ஜன்னல் பகுதியில் குழந்தைகளுக்கும் எட்டும் வகையில் மின் இணைப்பு ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் ஆபத்தான நிலையில் வயர்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

மேலும், பெண்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்துகொண்ட நிலையில், போதிய கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் ஏதும் செய்யப்படாமல், கண் துடைப்பிற்காக இந்த முகாம் நடைபெற்றுள்ளதாக மக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு நாட்களிலேயே, அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையாக முகாம் நடத்தப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்தடுத்து நடைபெறும் மக்கள் உடன் முதல்வர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்றும், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Views: - 304

0

0