விஷம் அருந்தி தற்கொலை செய்த குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2022, 4:47 pm
RB Udayakumar -Updatenews360
Quick Share

மதுரை : கொரோனா அச்சம் காரணமாக மதுரையில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் சாலையோர வாசிகளுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப் பெற்று இன்றைக்கு 250 ஆவது நாள். இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை ரயில் நிலையம் எதிரே தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உணவு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா ஊரடங்கு காலமான இன்று மதுரையில் சாலையோர வாசிகளுக்கு தன்னாரால் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நோய் தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படுவது உணவுதான்.

ஐ. சி. எம். ஆர். மற்றும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறுவது தொற்று பாதிக்கப்பட்டவர்களை 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்த வேண்டும் என்பது தான்.

அப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட போது மதுரை அருகே ஒரு துக்ககரமான துயரமான ஒரு நிகழ்வு மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியில் உள்ள MGR நகரில் நடந்துள்ளது.

அங்கு வசிக்கும் லட்சுமி என்பவருடைய கணவர் இறந்த கொஞ்ச நாளில் குடும்பம் வறுமையில் வாடிய நிலையில் அவருடைய மகள் ஜோதிகாவிற்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுருத்தி இருந்தார்கள்.

கடந்த காலங்களில் இப்படி நோய்த்தொற்று ஏற்பட்ட நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு என மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் அவர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்கள் காய்கறிகள்.உணவு மருந்து மாத்திரை உள்ளிட்ட சேவைகளை செய்து கொடுப்பார்கள்.

ஏனென்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை இருக்கும். ஆகவே தங்குதடையின்றி அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு கடந்த கால ஆட்சியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அதை போன்று கடந்த கால ஆட்சியில் அம்மா உணவகம் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ளார். அது உண்மையிலேயே வரவேற்கக் கூடியது.அதற்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

கூலி வேலைக்கு செல்பவர்கள் உழைத்து சாப்பிட்டு சாப்பிட்டு வருபவர்கள் தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் பல்வேறு இடங்களில் உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த கால ஆட்சியில் இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் 2500 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கினோம். பொங்கல் தொகுப்பு, நிவாரண பணம் வழங்கி வந்தோம். தற்போது ஊரடங்கு காலத்தில் கிடைக்க வேண்டிய நிவாரணம், பொங்கல் நிவாரணம் இப்படி எதுவும் கிடைக்காத காரணத்தால் சக்கிமங்கலத்தில் ஒரு குடும்பமே விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்து தாயும் – மகனும் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவர்களுக்கு அடிப்படை தேவையான உதவியை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

முககவசம் அணிய வலியுறுத்தி தானே களத்தில் இறங்கி முக கவசம் அணிந்து விடும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழக முதல்வர் இதுபோன்று தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்ட வர்களுக்கு அடிப்படை தேவையான உணவினை வழங்க வேண்டும் என்றார்.

Views: - 377

0

0