‘HOME WORK நோட் எங்கே..? உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’… பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை ; போலீசார் வழக்குப்பதிவு!!
Author: Babu Lakshmanan27 நவம்பர் 2023, 4:02 மணி
ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள களப்பான்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு பரமேஷ் (13), சங்கீதா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என 2 குழந்தைகள் உள்ளன. கணேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட கவிதா கோவில்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். கவிதாவின் மூத்த மகன் பரமேஷ் கழுகுமலையில் உள்ள ஆர்.சி.சூசை மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 22ந் தேதி பரமேஷ் பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது, வகுப்பில் இருந்த சமூகவியல் ஆசிரியை ரெமிலா (49), மாணவர்களிடம் ஹோம் ஒர்க் நோட்( வீட்டுப்பாட நோட்) கேட்டுள்ளார். பரமேஷ் உள்பட அனைத்து மாணவர்களும் தங்கள் செய்த வீட்டு பாடங்களை ஆசிரியை ரெமிலாவிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்றுள்ளனர். பிராத்தனை முடிந்து வந்ததும் மாணவர் பரமேஷிடம் ஹோம் ஒர்க் நோட்டை எடுத்து வரும்படி ஆசிரியை ரெமிலா கூறியுள்ளார். இதையடுத்து மாணவர் பரமேஷ் தனது பேக்கில் நோட்டை பார்த்தபோது, அது காணாமல் போய் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நோட்டை காணவில்லை, என்று மாணவர் பரமேஷ் ஆசிரியை ரெமிலாவிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் ரெமிலா, ஹோம் ஒர்க் செய்யாமல் பொய் சொல்கிறாயா ? என்று கம்பால் மாணவர் சந்தோஷை அடித்துள்ளார். இதில் மாணவர் பரமேஷுக்கு கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மாணவர் பரமேஷ் கழுத்தைப் பிடித்து அடிக்க முயன்றுள்ளார் ஆசிரியை ரெமிலா. இதை மாணவர் தடுக்கவே, அவருடைய சட்டையை பிடித்து வெளியே தள்ளியது மட்டுமின்றி, எனக்கு இருக்கும் கோபத்தில் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர் பரமேஷின் தாயார் கவிதாவுக்கு, ஆசிரியை ரெமிலா போன் செய்து உங்கள் மகன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவர் பரமேஷின் தாயார் கவிதா பள்ளிக்கு வந்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி, கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சமாதானமாக செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, கவிதா சைல்ட் லைனுக்கு மூலமாக புகார் கொடுத்துள்ளார். அவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை தாக்கியது தெரியவந்துள்ளது. இதில் காயம் அடைந்த மாணவர் சந்தோஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை ரெமிலா மீது கழுகுமலை காவல்துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாணவர் பரமேஷ் கூறுகையில், தான் வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் செய்து நோட்டை, ஆசிரியரிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாகவும், அதன் பின்னர் தன் நோட் காணாமல் போய்விட்டதாகவும், பிரயர் முடிந்த பின்னர் வகுப்புக்கு வந்த போது தனது நோட் காணாமல் போய் இருந்ததாகவும், பின்னர் ஆசிரியை அந்த நோட்டை கேட்டு தன்னை அடித்ததாகவும், தான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஆசிரியை கேட்கவில்லை, சக மாணவர்களும் நான் நோட்டை காண்பித்து கையெழுத்து வாங்கியதை கூறினாலும், எதையும் கேட்காமல் தன்னைக் கம்பால் ஆசிரியை தாக்கி வெளியே தள்ளியதாகவும், இதுபோன்று பல மாணவர்களை அந்த ஆசிரியை அடித்துள்ளதாகவும், ஆனால் வெளியே சொல்ல அனைவரும் பயந்து வருவதாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட மாணவர் பரமேஷின் தாயார் கவிதா கூறுகையில், “ஆசிரியை மீது தான் கொடுத்த வழக்கினை வாபஸ் பெற கோரி வேறு நெருக்கடிகள் தனக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும், பிரச்சனை குறித்து பள்ளியில் புகார் செய்தபோது ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், வேண்டுமென்றால் உங்கள் மகனை வேறு பிரிவுக்கு மாற்றி விடுவோம் என்று கூறினார். அந்த ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், வேறு எந்த மாணவருக்கும் இதுபோன்று நிலை வரக்கூடாது, என்றார்.
இதே பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சி. ஆர் காலனியைச் சேர்ந்த காளிராஜ் என்ற மாணவரை அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் பாலமுருகன் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், மாணவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதுகுறித்து காளிராஜ் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம், மாணவரின் கல்வி பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளனர். சிகிச்சை முடிந்து வந்த பின்னர் மாணவனை பள்ளிக்கு வரச் சொல்லி உள்ளனர்.
மீண்டும் மாணவர் காளிராஜ் பள்ளி சென்றபோது, ஆசிரியர் பாலமுருகன் கூறிய குடும்ப கட்டுப்பாடு குறித்து சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், மன உளைச்சலுக்கு உள்ளான காளிராஜ் தனது பாட்டி வைத்திருந்த பிரஷர் மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதைடுத்து அந்த மாணவரை அவரது பெற்றோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர். சிகிச்சை முடிந்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவரை பள்ளிக்கு வர வேண்டாம் தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும் என்று கூறியுள்ளனர். படிக்காமல் எப்படி தேர்வு எழுது என்று வழி தெரியாமல் அந்த மாணவரும் அவரது பெற்றோர்களும் பரிதவிக்கும் நிலை உள்ளது
இப் பிரச்சனைகள் குறித்து கேட்டறியே பள்ளி நிர்வாகத்திடம் நாம் தொடர்பு கொண்ட போது தங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை, இது குறித்து விசாரித்துவிட்டு பின்னர் அழைப்பதாக கூறிவிட்டனர்.
பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து கல்வித்துறை சார்பில் குழு அமைத்து உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் பயிலக்கூடிய பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
0
0