கர்நாடக வனத்துறையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு… ஆற்றில் மிதந்து வந்த தமிழரின் உடல் : இருமாநில எல்லையில் போலீசார் குவிப்பு!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 7:07 pm
Quick Share

மேட்டூர் அடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடல் பாலாறு காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரி ஆற்றை பரிசல் மூலம் கடந்து மறு கரையில் உள்ள கர்நாடக வனப்பகுதியில் வேட்டைக்கு இரவு 2 மணி அளவில் சென்றனர். வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர், வேட்டை கும்பலை சரணடைய செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக வனத்துறையினர் தமிழக வேட்டை கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது, ஆற்றில் குதித்து கரை நீந்தி ரவி மற்றும் இளையபெருமாள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

மாயமான ராஜாவை தேடி வந்த நிலையில், இன்று காலை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு அடிபட்ட ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் கிடந்தது. ராஜாவின் சடலத்தை காண கிராம மக்களும், உறவினர்களும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் வனத்துறையினர் அங்கு தகவல் தெரிவித்தனர். இதனால், பதட்டத்தை தணிக்க இரு மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Views: - 423

0

0