பெற்றோர் திட்டியதால் மாயமான 13 வயது சிறுமி…இன்ஸ்டாகிராம் தோழியை தேடி சென்னை பயணம்: செல்போன் சிக்னலை வைத்து மீட்ட கோவை மகளிர் போலீசார்..!!

Author: Rajesh
14 May 2022, 2:30 pm
Quick Share

சென்னை: பெற்றோர் திட்டியதால் இன்ஸ்டாகிராம் தோழியை தேடி சென்னை சென்ற சிறுமியை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாணவிக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அதன் மூலம் மாணவி பாடம் படித்து வந்தார்.

அப்போது மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவேற்றம் செய்து கொண்டார். பாடம் படித்த நேரம் போக அதிக நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிட்டு வந்தார். இதனை அவரின் பெற்றோர் கண்டித்தனர். பெற்றோரின் கண்டிப்பால் மனவேதனை அடைந்த சிறுமி தனது சக இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனம்விட்டு பேசியிருக்கிறார்.

பின்னர் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தான் பயன்படுத்திய செல்போனுடன் மாயமானது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மாணவியை அவர் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் மூலம் தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருக்கும் தோழி ஒருவரின் உதவியை நாடினர்.

போலீசார் மாணவியின் தோழியை இன்ஸ்டாகிராம் மூலம் பேச வைத்தனர். அப்போது காணாமல் போன மாணவியிடம் சக தோழியை ‘என்னையும் கூப்பிட்டிருக்கலாமே … நானும் வந்திருப்பேன் … எங்க டி போயிட்டுருக்க’ என கேட்க வைத்தனர். அப்போது மாணவி ரயிலில் சென்று கொண்டு இருந்ததால் அவரது பேச்சு விட்டுவிட்டு கேட்டது. இதனையடுத்து மாணவி ரெயிலில் பயணம் செய்து கொண்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் பேசிய நிலையில் பதிவான வீடியோவில் ஒரு இடத்தில் ரெயில் வண்டி இருப்பதை போலீசார் பார்த்தனர். அப்போது அந்த ரயில் கோவை-சென்னை விரைவு ரெயில் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரெயில் புறப்படுகின்ற நேரம், சென்றடையும் நேரத்தை கணித்து மாணவி செல்போன் சிக்னலை வைத்தும் அரக்கோணம் அருகே ரெயில் செல்வதை உறுதி செய்தனர்.

மாணவி முன்பதிவில்லாத பெட்டியில் பின் பகுதியில் அமர்ந்திருப்பதனையும் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு மாணவியின் புகைப்படத்தையும், சிறுமியின் உடை அடையாளத்தையும் தெரிவித்தனர். ரெயில் அரக்கோணம் சென்றதும் ரெயிலில் பயணம் செய்த மாணவியை ரெயில்வே போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் கண்டித்ததால் அவருடன் தங்குவதற்காக மாணவி சென்னைக்கு சென்றது தெரிய வந்தது. விசாரணை முடிந்ததும் மாணவியை போலீசார் அவரது பெற்றோரிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Views: - 641

0

0