பணியில் அலட்சியம்… பொன்னை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர்கள் இருவர் பணியிட மாற்றம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 3:30 pm
Quick Share

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சரியான முறையில் கவனம் செலுத்தாத இரண்டு மருத்துவ அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மக்கள் அமைச்சர் மாஃ சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பங்கேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது :- தமிழகத்திற்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கல்லூரிகள் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகள் என தெரிய வந்தால் 104 என்ற இலவச தொலைபேசி எண் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தமிழக முழுவதும் 32 இடங்களில் மருத்துவ கிடங்குகள்அமைக்கப்பட்டு அந்த இடங்களில் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எடுத்து வருவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாவட்டம் பொன்னை அரசு மருத்துவமனையில் சரியான முறையில் பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் ஆகிய இரண்டு பேரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொன்னை அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தவும் புதிய கட்டிடங்களை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இனிவரும் காலங்களில் நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மருந்துகள் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர்கள் மேல்பாடி, திருவலம், ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆய்வு செய்தனர்.

Views: - 852

0

0