ரூ 3.75 கோடி மதிப்பில் வேணாட்டரசர்கள் அரண்மனை சீரமைப்பு பணி : அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு

Author: Babu Lakshmanan
28 June 2021, 7:28 pm
mani thangaraj - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வேணாட்டரசர்கள் அரண்மனையை ரூ 3.75 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இரணியல் பேரூராட்சிக்குட்பட்ட வேணாட்டு அரசர்கள் அரண்மனையை ரூ 3.75 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- குமரி மாவட்டம் இரணியலில் அமைந்துள்ள இந்த அரண்மனை கிபி 12ஆம் நூற்றாண்டில் இருந்து வேணாட்டு அரசர்கள் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாக கருதப்படுகிறது.

ஆனால் நீண்ட காலமாக பராமரிக்கப்படாத காரணத்தால் ,தற்போது இந்த அரண்மனை இப்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. எனவே இந்த அரண்மனையை மறுசீரமைத்து தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாக மீட்டு எடுக்கின்ற முயற்சியில் தமிழக முதல்வர் அவர்கள் தலைமையிலான அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இரணியல் அரண்மனையை சீரமைப்பதற்காக தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பணியினை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனை குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்னிடமும் , இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதனடிப்படையில் இன்று அரண்மனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மறு சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணிகளை முடிக்க இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சீரமைக்கும் பணிகளுக்கு அதிகமாக நிதி தேவைப்படும் பட்சத்தில் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி அதிக நிதியை பெற்று மறு சீரமைக்கும் பணியினை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது சேதமடைந்த இரணியல் அரண்மனை கட்டிடம் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு தென்பகுதி பாகங்களில் பழுதடைந்த கட்டுமானங்கள் பழுதடைந்த கூரைகள் கவனமுடன் அகற்ற பணி நடைபெற்று வருகிறது.

மேலும் முதல்கட்டமாக புனரமைப்பு பணிக்கு தேவைப்படும் தேக்கு மரங்கள் ,1500 கன அடி தனி வகை செங்கல்கள், சுண்ணாம்பு, ஆற்றுமணல் ஒப்பந்தக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டு தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது .தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சிறிய அளவில் மட்டும் ஐந்து பணியாளர்கள் மூலமே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இரணியல் அரண்மனை மறு சீரமைப்பு பணி காலதாமதமின்றி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரிண்ஸ் , அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் ,திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல்.சிவராஜ் உடனிருந்தனர்.

Views: - 316

0

0