குமரியில் மருத்துவரிடம் ஒன்றரை கோடி மோசடி : போலி வக்கீல் கைது!!

16 January 2021, 1:59 pm
Fake Lawyer Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மருத்துவரிடம் ஒன்றரை கோடி மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த போலி வக்கீல் ஒருவரை பேலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ராமதாஸ். இவர் அப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தான் நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வருகிறேன். அதேபோல் மற்றொரு ஆஸ்பத்திரியை தொடங்க நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலத்தை வாங்கி ஆஸ்பத்திரி அமைக்கும் பணியை தொடங்கினேன்.

அப்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அருள் முருகன் என்பவர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினால் ரூ 50 கோடியை கடனாக பெற்று தருவதாக கூறினார். இதற்காக அருள்முருகன் கமிஷன் அடிப்படையில் ஒன்றரை கோடி தரவேண்டும் என கூறினார்.

இதனை தொடர்ந்து அருள்முருகன் என்னிடம் இருந்து ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அருள் முருகனின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கே அவர் அளித்த முகவரியில் அருள் முருகன் என்ற நபர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் அவர் வக்கீல் இல்லை என்றும் பண மோசடி செய்ததையும் அறிந்தேன். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான அருள் முருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைத்து அருள் முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் போலி வக்கீல் என்பதும் அவர் கொடுத்த முகவரிகள் அனைத்தும் போலியானது என்பதும் தெரியவந்தது.

பின்னர் அருள் முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காலான்கரை என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாக்டரிடம் பண மோசடியில் ஈடுபட்ட அவர் தனது தோற்றத்தை பல்வேறு விதமான வகையில் மாற்றியுள்ளார். மேலும், போலியாக அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து இருந்ததும் தெரியவந்துள்ளது. போலீசார் அவற்றை கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0