ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிருக்கு போராடிய நபர்: இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற அவல நிலை

17 June 2021, 10:58 pm
Quick Share

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிருக்கு போராடும் நபரை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14). இவரது தந்தை ஜெயராமன் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் பள்ளி படித்து வரும் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த சசிகுமாரை அவரது அக்கா பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என சசிகுமாரை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த சசிகுமார் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் உடனடியாக சசிகுமாரை பொறையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் சசிகுமாருக்கு செவிலியர்கள் முதலுதவி செய்த நிலையில் பின்பு அருகிலுள்ள செம்பனார்கோயில் , ஆக்கூரிலும் மருத்துவர்கள் இல்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து சசிகுமார் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சசிகுமாரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவிக்கு தொடர்பு கொண்டபோது அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழியில் ஆம்புலன்ஸ் இருப்பதாகவும் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என தெரிவித்ததால். சசிகுமாரை உயிருக்கு போராடிய நிலையில் இருசக்கர வாகனத்தில் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை உள்ளதாகவும் தரங்கம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

Views: - 120

0

0