மேலே எம் சாண்ட்….அடியில் ஆற்று மணல்: வாகன தணிக்கையில் வசமாக சிக்கிய மணல் கொள்ளையர்கள்..!!

Author: Rajesh
16 March 2022, 6:58 pm
Quick Share

வேலூர் – காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நூதன முறையில் வேனில் மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நூதன முறையில் மணல் கடத்தி வருவதாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில் விருதம்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ், ராமமூர்த்தி மற்றும் போலீசார் காட்பாடி அடுத்த விருதம்பட்டு விஷ்ணு தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த டாட்டா ஏஸ் வேனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், மேலோட்டமாக எம்சாண்ட் மண் தூவி அதற்கு அடியில் ஒரு யூனிட் பாலாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், கலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்து ஒரு யூனிட் மணல் உடன் டாட்டா ஏஸ் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சேண்பாக்கம் பாலாறு படுகையில் இருந்து இவர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Views: - 1165

0

0