பல் பிடுங்கிய விவகாரம்… முதல்நாள் விசாரணையில் திடீர் திருப்பம் : அதிர்ந்து போன விசாரணை அதிகாரி!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 7:37 pm
Quick Share

விசாரணைக் கைதிகளின் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற முதல் நாள் உயர்மட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகாததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணை கைதிகளின் பல்லை ஏஎஸ்பி ஆக இருந்த பல்வீர் சிங் கொடூரமாக பிடுங்கியதாக கூறப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவகாரத்தை முதன் முதலில் கொண்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சேரன்மகாதேவி சார் ஆட்சி முகமது சபீர் ஆலம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதில் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் நேரில் ஆஜராகி சார் ஆட்சியரிடம் விளக்கம் அளித்தனர். அதன் அறிக்கையை சார் ஆட்சியர் ஆட்சியரிடம் சமர்ப்பித்தார்.

பின்னர் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி அமுதா நேற்று நெல்லை வந்து வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த ஆவணங்களை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து உயர் மட்ட விசாரணை நடைபெறும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் அல்லது வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை விசாரணை அதிகாரி அமுதா வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஏற்கனவே உயர்மட்ட விசாரணையை புறக்கணிக்க போவதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்கள் சார்பிலும் யாரும் விசாரணைக்கு வரவில்லை.

இதற்கிடையில் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எழுத்தர் வின்சென்ட், உதவி ஆய்வாளர் மகாலட்சுமி இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர். சுமார் 20 நிமிட விசாரணைக்கு பிறகு இருவரும் அங்கிருந்து சென்றனர். மாலை 4 மணி வரை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து விசாரணை அதிகாரி அமுதா முதல் நாள் விசாரணையை முடித்துக் கொண்டு நெல்லை கிளம்பி சென்றார். முன்னதாக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அமுதாவிடம் செய்தியாளர்கள் விசாரணையின் போக்கு குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரி அமுதா எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக காரில் ஏறி சென்றார்.

தொடர்ந்து நாளை மீண்டும் அம்பாசமுத்திரத்தில் விசாரணை நடைபெறுமா?. அல்லது மாநகரில் வைத்து விசாரணை நடைபெறுமா என்ற குழப்பம் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து கேட்டபோதும் விசாரணை அதிகாரி அமுதா பதில் எதுவும் கூறவில்லை பல் புடுங்கப்பட்ட விவரத்தில் சம்பந்தப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், இதுவரை இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர்கள் உட்பட 11 பேர் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 283

0

0