ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை விற்பனை செய்யும் தனியார் : சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 4:30 pm
Land Issue -Updatenews360
Quick Share

பழனி : உச்சவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி பெரியம்மாபட்டி பகுதியில் உச்சரவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காலை பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் திடீரென அவர்கள் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரியம்மாபட்டி பகுதியில் அரசின் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு வழங்கிய நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் போலி பட்டா மூலம் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநில அரசில் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நிலங்களை மீட்டு தர வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், தாசில்தார் சசிக்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Views: - 787

0

0