‘போன ஆட்சியில் அறிவித்த திட்டங்கள்தான் இருக்கு’… வெளிநடப்பு செய்த அதிமுக ; சேலம் பட்ஜெட் கூட்டத்தொடரில் சலசலப்பு!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 4:20 pm
Quick Share

சேலம் : நடப்பு நிதிஆண்டிற்கான சேலம் மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தொடரை அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2023 – 2024ஆம் நிதி ஆண்டிற்கான சேலம் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நிதி குழு தலைவர் குமரவேல் தாக்கல் செய்தார். வரவு செலவினங்கள் விவரப்படி நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் 1.26 கோடி பற்றாக்குறை இருப்பதாக நிதி நிலை அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளின் தர மேம்பாட்டிற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் ராமச்சந்திரன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், சேலம் மாநகர மக்களின் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டி, அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுமே இந்த நிதிநிலை அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாக கூறிய அதிமுக கவுன்சிலர்கள், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதால் அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

நிதிநிலை அறிக்கையை முழுமையாக படிக்காமல் விளம்பரத்திற்காக அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக திமுக தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது.

Views: - 326

0

0