அண்ணாமலை சொல்வது வடிவேலு காமெடி போல உள்ளது.. அதிக தொகுதிகள் பெற திட்டமிட்டுள்ளோம் : கேஎஸ் அழகிரி!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 11:52 am
KS Azhagiri - Updatenews360
Quick Share

அண்ணாமலை சொல்வது வடிவேலு காமெடி போல உள்ளது.. அதிக தொகுதிகள் பெற திட்டமிட்டுள்ளோம் : கேஎஸ் அழகிரி!

சிவகாசியில் நடந்த விருதுநகர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளின் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா முழுவதும் மக்கள் தொகையை ஜாதி வாரியாக கணக்கெடுக்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு முழுமை அடைந்தால் தான் அனைவருக்கும் இட ஒதுக்கீடு சரிசமமாக கிடைக்கும். தற்போது சமமற்ற தன்மை உள்ளது.

இந்து தர மக்களிடையே சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவான இட ஒதுக்கீடுகளையும் பெற்று வருகின்றனர். ஓ பி சி யில் 60% மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் உள்ளனர். இதில் அவர்களுக்கு ண்டான இட ஒதுக்கீடு 27 சதவீதம் தான் உள்ளது. இது போதுமானதல்ல.

தமிழகத்தில் இந்து கோவில்களை அரசு கைப்பற்றி சொத்துக்களை கொள்ளையடிப்பதாக தவறான ஒரு செய்தியை பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது தவறான கருத்தாகும். முன்பாக கோவில் கொள்ளையர்களின் கூடாரமாக இருந்தது. வலிமையானவர்கள் கையில் கோயில் சொத்துக்கள் இருந்து எளியவர்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத சூழல் இருந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தரை தீயிட்டு கொளுத்திய வரலாறு எல்லாம் இருந்த காலம் மாறி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்து கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

அதன் பின்பாக காமராஜர் ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட பரமேஸ்வரன் என்பவர் அத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்பாக தலித்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட புரட்சி காமராஜர் ஆட்சி காலத்தில் தான் நடந்தது.

இது போன்ற வரலாறுகள் எல்லாம் மோடிக்கு தெரிய வாய்ப்பில்லை. மோடி இந்தியாவைப் பற்றி அறிந்த,தெரிந்தவர் கிடையாது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனியார் வசம் இருந்த கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது.

அதேபோன்று ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறநிலைத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

இப்பிரச்சனையில் திமுக தலைமையிலான எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தவும், எங்களது வெற்றியை தடுக்கின்ற சூழ்நிலையிலும், பிரதமர் மோடி பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக திமுக தலைமையிலான கூட்டணியில் முன்பை விட அதிகமான தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெறுவோம். பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் வசதி இல்லாததால் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இப்பிரச்சனை குறித்தும், பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் உற்பத்தி செய்வது பற்றியும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துச் சென்று பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சொல்வது நானும் ரவுடிதான், நானும் ரௌடிதான் என சிரிப்பு நடிகர் வடிவேலு பாணியில் உள்ளது.

பாஜகவுக்கும்- அண்ணாமலைக்கும், எங்களுக்கும் தான் போட்டியென தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக புதிய முகங்களும், பழைய முகங்களும் திரைப்பட பாணியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள்.

அதே போன்று புது முகங்களுக்கும், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்படும். மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும்படி கேட்டு பெறுவோம். என்றார். பேட்டியின் போது எம்பிக்கள் மாணிக்கம்தாகூர், வசந்தகுமார் மற்றும் எம்எல்ஏஅரசன் அசோகன் உடன் இருந்தனர்.

Views: - 290

0

0