சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைய பரிந்துரைத்த முன்னாள் நீதிபதி மரணம்! முதல்வர் இரங்கல்!!
27 August 2020, 2:01 pmஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர் லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று இரவு 11 மணி அளவில் மாரடைப்பு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சட்ட ஆணைய தலைவராகவும், முல்லை பெரியாறு ஆய்வு குழுவிலும் இடம் பெற்ற இவர், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் ஆவார். இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள முதலமைச்சர், நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் தனது கடின உழைப்பு, திறமையான வாதத்தால் நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவு, தமிழகத்திற்கும் நீதித்தறைக்கு பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியவர் ஏ.ஆர் லட்சுமணன், சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைய வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியவர் என குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர் லட்சுமணனின் மனைவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் காலமானார். அவர் காலமான 48 மணி நேரத்தில் நீதிபதியும் இறந்தது இதயத்தை நொறுங்கிப் போக வைக்கிறது என ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.