முட்புதருக்குள் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏழு கற்சிற்பம் கண்டெடுப்பு : ஆய்வு செய்யும் தொல்லியல் துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2023, 5:53 pm
Archeology - Updatenews360
Quick Share

தென்னமநல்லூர் அருகே முட்புதர் பகுதியில் ஒரே இடத்தில் ஏழு கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அகத்தாபட்டி இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமம் தென்னம நல்லூர் சுமார் 400 ஆண்டு பழமையான கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை கௌரவ விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் தென்னமநல்லூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி பி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கள ஆய்வாளர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியாதவது, இப்பகுதியில் மதுரையில் நாயக்கர் ஆட்சி காலத்தில் தென்னவன் என்ற குறுநில மன்னர் நிர்வாகம் செய்துள்ளார்.

அவர் பணியை பாராட்டி நாயக்கர் மன்னன் அவரின் பெயர் தென்னவன் நாடு என்று அழைக்கப்பட்டன காலப்போக்கில் தென்னம நல்லூர் பெயர் மாறியது..

சதி வழக்கம்

இறந்துபோன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்த பின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் சதிக்கல் எனப்படுகிறது.

இதில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்றும், அதில் வளையல் உள்ளிட்ட அணிகலங்கள் அணிந்தவளாகவும் காணப்படுவாள்.

தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பார். மாலை, சதி ஆகிய சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு.

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கைம்பெண்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்தன. ஆனால் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கினர். கணவன் மீது கொண்ட அன்பினாலோ, கட்டாயத்தினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.
மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களுக்கு கட்டப்பட்டு பல குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். குறுநில மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.

ஏழு சதிக்கல்

தற்போது ஊரின் கிழக்கு பகுதியில் நீரோடையில் அருகே முட்புதரில் புதைந்து இருக்கின்றது. இச்சதிக்கல்கள் 3 அடி உயரம், 1 ½ அடி அகலமும் கொண்டவை .

கற்சிலை மேல் கூடாரம் அமைப்பு சாய்வாகவும், முக்கோண வடிவமாகவும் ,வட்ட வடிவமாகவும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன . மொத்தம் ஏழு சதிக்கல் இருக்கிறது.

பொதுவாக இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் சிற்ப வடிவத்தில் ஆணின் உருவம் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி வீரன் என்பதற்காக வலது கையில் வாள் கத்தி போன்ற பொறிக்கப்பட்டுள்ளது. ஆணின் சிற்பத்தின் அருகில் பெண் சிற்பம் அமைந்துள்ளது. பெண் சிற்பம் இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடக்கியும் தனது வலது கையில் எலுமிச்சம் பழத்தை மடக்கிப் பிடித்து இருந்தால் அந்தப் பெண் சுமங்கலி என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற வடிவம் ஒரே இடத்தில் 7 சிற்பங்கள் காணப்படுகிறது. இச்சிற்பம் சதிக்கல் என அழைக்கப்படுகிறது .தற்போது சிற்பங்கள் தனியார் நிலத்தில் புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கிறது என்றார்.

Views: - 224

0

0