சினிமா பாணியில் கொள்ளை : சொந்தக் கடையில் 14 கிலோ நகை திருடிய மகன் !!

6 September 2020, 4:52 pm
Theft Son arrest - Updatenews360
Quick Share

சென்னை : சவுகார்பேட்டை அருகே உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் நகை திருட்டு போன வழக்கில் கடை உரிமையாளரின் மகனே நகையை திருடியது அம்பலமாகியுள்ளது.

சென்னை சவுகார்பேட்டை அருகே யானைகவுனியில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலை வீரப்பன் தெருவில் சங்கம் கிராஃப்ட் என்ற பெயரில் நகைக் கடை உள்ளது. சுமார் 20 வருடமாக இந்தக் கடையை ராஜ்குமார் மற்றும் சுபாஷ் போத்ரா ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

தங்க நகைகளை டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். மேலும் தங்க நகை டிசைன்களை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாடிக்கையாளர்களுக்கு காட்டி அவற்றை மீண்டும் லாக்கரில் வைத்து பூட்டி வைப்பது வழக்கம்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் 21ஆம் தேதி தங்க நகை டிசைன்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து விட்டு மீண்டும் லாக்கரில் பூட்டி வைத்தனர். இதன் பிறகு அடுத்த செவ்வாய் கிழமையான ஆகஸ்ட் 25ஆம் தேதி மீண்டும் நகைகளை எடுக்க லாக்கரை திறந்தனர், அப்போது 14 கிலோ எடையுள்ள நகைகள் காணாமல் போயிருந்தததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பூட்டு உடைக்காமல் நகைகளை திருட்டு போயிருப்பதால் நகை கடை ஊழியர்கள் அல்லது கடை உரிமையாளர்கள் குடும்பத்தினரின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து சிசிடிவி காசிகள் மற்றும் அப்பகுதியல் பதிவான செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது நகை கடை உரிமையாளரில் ஒருவரான சுபாஷ் போத்ராவின் மகன் ஹர்ஷ் போத்ரா நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து ஹர்ஷ் போத்ராவை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 14 கிலோ நகையை பறிமுதல் செய்தனர். இது குறித்த விசாரணையில், தனது ஆன்லைன் டிரேடிங் பிஸ்னசில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை ஈடுகட்ட சொந்தக் கடையில் திருடியதாக வாக்குமூலம் அளித்தார்.

மேலும் தந்தையிடம் இருந்த லாக்கர் சாவியை எடுத்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சொந்த கடையிலேயே நகையை திருடிய மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0