கோவையில் இருந்து லாரி லாரியாக கனிமவளக் கொள்ளை… CM ஸ்டாலின் வீட்டுக்கு போகும் கமிஷன் : எஸ்பி வேலுமணி பகீர் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 8:07 pm
Quick Share

கோவை மாவட்டத்தில் தினமும் 5000 லோடு கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு, அந்த பணம் முதல்வரின் குடும்பத்திற்கு வழங்கப்படுவதாக எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசின் 30,000 கோடி ஊழல் கள்ளச்சாராயம் போலி மதுபானங்களால் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் திமுக அரசின் 30,000 கோடி ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கள்ளச்சாராயம் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களை கண்டித்தும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் திருவள்ளுவர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி கந்தசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக அரசை கண்டித்தும், தமிழக முதல்வர் பதவி விலக கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தாமல் புறக்கணிக்கப்பட்டது. தமிழகத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் கள்ளச்சாராயம் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 30,000 கோடி ஊழல் செய்து குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சரே ஒப்புதல் அளித்துள்ளார். இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

மதுபானங்கள் வீதி வீதியாக விற்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தினமும் 5000 லோடு கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு,அந்த பணம் முதல்வரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வீடு கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தொடர்ந்து, திமுக அரசின் அராஜகத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும், என தெரிவித்தார்.

Views: - 130

0

0